Saturday, February 12, 2011

அதே மழை...சில துளிகள்...





 “மெப்ஸ் ஒன்னு”
 “சானடோரியம் ஒன்னு”
இருவர் மட்டும்தானே
அன்று பயணச்சீட்டு வாங்கினோம்?
 “எனக்கும் ஒன்னு”
என எப்போது நம்மிடையே 
தொற்றிக்கொண்டது காதல்?

~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/

FZஇல் முன்னிருக்கையில் நீ
பின்னிருக்கையில் நான்
மிரட்டும் வேகத்தில் கிளப்ப
முதுகில் சாத்தி
மிரண்டு சாய்கிறேன் நான்.
அதே பாதையில் இன்னும் பயணிக்கும்
குந்தவையும், வந்தியத்தேவனும்
சிரித்துக் கொள்கிறார்கள்,
கூடவே தொல்காதலும்.

~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/

பேசிக்கொண்டேயிருந்தவன்
திடீரென மௌனித்து
கண்பார்த்து
அமைதியாய் 
நெருங்கினாய்.
உனக்கும் எனக்கும் இடையே
ஒரு ரோஜா அளவு இடம்விட்டு.
தயக்கங்களோடு பார்க்கிறேன் நான்.
விழ யத்தனித்திருந்த
ஒட்டுப்பொட்டை
அழுத்தி நிறுத்திவிட்டு
சாதாரணமாய் விலகினாய்.
ஒளித்துவைத்திருந்த பொம்மையை
காகம் தூக்கிப்போன சோகம் எனக்கு.

(எங்கேன்னு நினைவிருக்கா?- அமர்க்களம், உன்னோடு வாழாத பாடல்,கூந்தல் எடுத்துவிடல்.)

~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/~’~~_~/

ODCக்கு வெளியே எப்போதும்
உலவுகின்றன கைபேசியணைத்த கைகள்.
எல்லா இரயில்களிலும்
சொல்லப்படாத நேசமொன்று
பகிரங்கமாய் இதயம் வரைந்து
பெயருடன் பிரகடனம் செய்யப்படுகிறது.
OAT வெயிலில் நனைந்து உலகம் மறக்கின்றனர்
யாரோ பெற்றெடுத்த அடுத்த பெற்றோர்.
அலுவலக வண்டிக்கு வரிசையில் காத்திருக்கையில்
ஒலிக்கிறது “ஹோஸன்னாஆஆஆ”
வந்துமீளும் வண்டிகளுக்கு நடுவில்
வரிசையில் இன்னும் காத்திருக்கிறேன் நான்
நிறைய கனவுகள்,கொஞ்சம் எதிர்பார்ப்புகளோடு!

*ODC- Offshore development centre
OAT-Open Air Theatre

Sunday, February 6, 2011

வரவு அஞ்சுலட்சம்,செலவு ஒத்த உசிர்..

புதுபோட் வாங்கினதுக்கு ஒரு லட்சம்
மூணு மாசத்தில் அறுந்த வலைகளுக்கு
மொத்த செலவு அம்பதாயிரம்
பெரியக்கா கல்யாணக் கடன் ரெண்டு லட்சம்
ரெண்டு பேருக்கும் கான்வண்ட் ஸ்கூல் பீஸ் எட்டாயிரம்
போட்டோக்கு மாலை போட்ட பெரிய மனுசங்களுக்கு
கறிசோறு ரெண்டாயிரம்,காபி டீ ஐநூறு
கலைஞர் டிவி கேபிளுக்கு மாசம் இருநூறு
பட்டியல் வளர்ந்துகொண்டே இருந்தது
“கருவாட்டை கொண்டுபோய் விக்க சொன்னேன்ல”
அம்மா கோவத்துடன் முதுகில் அடித்ததில்
நழுவி விழுந்த பென்சில் ரெண்டாய் உடைந்தது
அப்பா அடிக்கடி சொல்வாரு தலையிலடிச்சிகிட்டே
“இந்த தொழிலுக்கு வராதீங்கடா படிச்சி வேலக்கி போங்க”
ஹ்ம்ம் அவரு அங்கேருந்து பாப்பாரா?
முணுமுணுத்துக் கொண்டே கூடையை தூக்கியவள்
உடைஞ்ச பென்சிலுக்கு அஞ்சு ருபாய் சேர்க்கவே இல்லை.